நாட்டில் பெரும்பாலானோருக்கு வேலை அளிக்கும் விவசாயத் துறையினருக்கு ‘நிலம் கையகப்படுத்தும் மசோதா’மூலம் அதிர்ச்சி கொடுத்திருக்கும் மோடி அரசு, அடுத்தகட்ட அதிர்ச்சியைத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கத் தயாராகிவிட்டது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை இருந்திராத வகையில், தொழிலாளர் சட்டங்களைப் பெருமளவில் திருத்த அரசு உத்தேசித்திருப்பதை அரசின் மூத்த அதிகாரிகள் கட்டியம் கூறுகின்றனர்.
நாட்டின் மொத்தத் தொழிலாளர்களில் 8% பேர் மட்டுமே அமைப்புரீதியான பிரிவுகளில் பணிபுரிகின்றனர்.
இப்போதுள்ள சட்டப்படி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைசெய்யும் நிறுவனங்களில் ‘லே-ஆஃப்’ செய்ய அரசின் அனுமதி தேவை. இந்த வரம்பு நீக்கப்பட்டு 300 தொழிலாளர்கள் வரை வேலைசெய்யும் நிறுவனங்கள் அரசிடம் அனுமதி பெறாமலேயே ‘லே-ஆஃப்’ செய்துகொள்ளப் புதிய சட்டம் வழிவகுக்கும். அதேசமயம், இப்போது ‘லே-ஆஃப்’ சமயத்தில் அளிக்கப்படுவதைப் போல 3 மடங்கு (300%) தொகை அளிப்பது கட்டாயமாக்கப்படும். தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதில் நிறுவன நிர்வாகங்களுக்கு இப்போது இருக்கும் கட்டுப்பாடுகள்(?!) மேலும் குறைக்கப்படும். தொழிலாளர்கள் புதிய தொழிற்சங்கங்களை எளிதில் நிறுவ முடியாமல் சட்டம் கடுமையாக்கப்படும். வேலைநிறுத்தங்களை மேற்கொள்வதும் சட்டப்படி கடினமாக்கப்படும். அதேவேளையில், குறைந்தபட்ச ஊதிய சட்டம் அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும் வகையில் சட்டம் இயற்றப்படும். ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம், வேலையிடப் பாதுகாப்பு ஆகியவை உறுதிசெய்யப்படும். சுருக்கமாகச் சொன்னால், தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு இப்போதுள்ள குறைந்தபட்ச உரிமைகளும்கூட இனி கேள்விக்குறியாகிவிடும்.
உலகிலேயே கடுமையான தொழிலாளர் சட்டங்களைக் கொண்ட நாடு இந்தியாதான் என்று உலக வங்கியும் முதலீட்டாளர்களும் கருதுகிறார்கள், அதனாலேயே தொழில் வளர்ச்சிக்கேற்ற சூழலை உருவாக்கப் புதிய சட்டங்கள் என்கிறது அரசு. இந்தியத் தொழிலாளர்களைக் கேட்டால் தெரியும், அவர்களுக்குள்ள சட்டப் பாதுகாப்புகள் எந்த அளவுக்கு அரசாலும் நிர்வாகங்களாலும் மதிக்கப்படுகின்றன என்று. வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் பெருக்க வேண்டும் என்றால், ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களை எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பும் உரிமை தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை எந்தக் கல்வி நிறுவனங்கள், எதன் அடிப்படையில் நம்முடைய நவீன நிர்வாகிகளுக்குச் சொல்லிக்கொடுக்கின்றன என்று தெரியவில்லை.
பாஜக அரசு வந்த உடனேயே தொழிலாளர் சட்டங்களில் கை வைக்கும் வேலையைத் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே தொழிற்சாலை ஆய்வாளர்கள் நினைத்தபடி ஆலைகளுக்குள் சோதனையை நடத்தக் கூடாது என்று தடுத்தாகிவிட்டது (அதன் மூலம் அதிகரித்த உற்பத்தி எவ்வளவு என்று தெரியவில்லை). இப்போது உரிமைப் பறிப்பை எதிர்த்துக் கேள்வி கேட்கும் சட்டரீதியிலான உரிமைகளையும் தொழிலாளர்களிடமிருந்து பறிக்க அரசு முனைகிறது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பைப் போல இதற்கும் எதிர்க் கட்சிகள் - தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்வினை இருக்கும் என்பதால், பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் இந்தச் சட்டமுன்வடிவை அரசு கொண்டுவரக் கூடும். அதற்குள் எதிர்த்தரப்பும் தயாராக வேண்டும்!