Wednesday, 3 February 2016

விபத்துக்களை தடுக்க இயலாதா?

தமிழகத்தில் பேருந்து நிலையங்களைவிட நீதிமன்றங்களில்தான் அதிக பேருந்துகள் நிற்கிறது.

ஏன் நீதிமன்றத்தில் இத்தனை பேருந்துகள் நிற்கிறது...? 

ஏன் நீதிமன்றங்கள் அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய வேண்டும்...? இந்தப் பேருந்துகள் அனைத்தும் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு  இழப்பீடு தராத பேருந்துகள். சரி... தனியார் பேருந்துகள் ஒன்றைக்கூட நீதிமன்ற வளாகங்களில் காணமுடியவில்லையே... அப்படியென்றால் அவர்கள் விபத்தே ஏற்படுத்துவதில்லையா..?

  அவர்களும் ஏற்படுத்துகிறார்கள். ஆனால், சரியாக இழப்பீடு தந்துவிடுகிறார்கள். அவர்கள் என்றால் அவர்கள் அல்ல; அவர்கள் காப்பீடு செய்த நிறுவனங்கள்.

அப்படியென்றால் அரசு பேருந்துகளுக்கும் தர வேண்டியது தானே...  ஆனால், தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் ஒன்றுக்கு கூட காப்பீடு செய்யப்படவில்லை.இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் காப்பீடு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

“தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமாக மொத்தம் 22,500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இருக்கின்றன. இதில் ஒன்றுகூட காப்பீடு செய்யப்பட்டது இல்லை. போக்குவரத்து கழகங்கள் உண்டாக்குவதற்கு முன்பு வரை அனைத்து பேருந்துகளுக்கும் காப்பீடு செய்யப்பட்டுதான் வந்தன. ஆனால் போகுவரத்து கழகம் உருவாக்கப்பட்ட பின் 1972 -ம் ஆண்டு முதல்,  பேருந்துகளுக்கு காப்பீடு கட்டுவது நிறுத்தப்பட்டுவிட்டன”

“தொழிற் சங்கங்கள் பல முறை இதுகுறித்து போக்குவரத்து கழகத்துடன் பேச்சு வார்த்தை நடத்திவிட்டது. தொடர் போராட்டம் மூலமாக பல அழுத்தங்களை தந்தாகிவிட்டது. ஆனால், போக்குவரத்துக் கழகம் 20,000 க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கும் காப்பீடு கட்டுவது கடினம். விபத்தில் தோராயமாக 200 பேருந்துகள் மட்டுமே சிக்குகின்றன. அவர்களுக்கு வேண்டுமானால். நாம் இழப்பீடு கொடுத்துவிடலாம் எனக் கூறிவிட்டது.
 
தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த நிலை. நம் அண்டை மாநிலமான கர்நாடகம், ஆந்திரம் ஆகிய  மாநிலங்களில் உள்ள அரசுப் பேருதுகள் அனைத்தும் முறையாக காப்பீடு செய்யப்பட்டவை. பேருந்து கட்டணம் நிர்ணயம் செய்யும்போது காப்பீடு கட்டணத்தையும் சேர்த்தே நிர்ணயிக்கிறார்கள். அந்த முறையை தமிழ்நாடும் பின்பற்ற வேண்டும்.

பொதுவாக பொது போக்குவரத்து பேருந்து,  9 ஆண்டுகள் ஓடிவிட்டால் அதை பயன்படுத்தக் கூடாது என்று ஒரு விதி இருக்கிறது. ஆனால், ஏறத்தாழ 17,000 பேருந்துகள் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிய பழமையானவை. இதுவே அடிக்கடி விபத்து நடக்க காரணமாகிறது!''

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை நாம் குறை கூறி,  தனியார் பேருந்துகளே சிறந்தது என்று, மொத்த போக்குவரத்து துறையையும் தனியார்மயமாக்கிவிட வேண்டும் என எண்ணினால் அது அறியாமை. போக்குவரத்து துறையை தனியாரிடம் கொடுத்துவிட்டால் நிச்சயம் அவர்கள் அதிக வருவாய் வரும் வழித்தடங்களில் மட்டுமே பேருந்தை இயக்குவார்கள். பல கிராமங்கள் பேருந்துகள் இல்லாமல் துண்டிக்கப்பட்டுவிடும்.

இதற்கெல்லாம் மேல் பொது போக்குவரத்து அரசிடம்தான் இருக்க வேண்டும் என்பதை சென்னை பெருவெள்ளம் நமக்கு உணர்த்திவிட்டு சென்றுவிட்டது. சென்னை பெருவெள்ளத்தின் போது, தனியார் பேருந்துகள் இயங்க மறுத்தபோது, அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கியது. அந்த முகம் தெரியாத பேருந்து ஓட்டுனர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் செயலாற்றினர். அவர்கள் தியாகம் அளப்பரியது.