மக்களைச் சுரண்டுவதற்கான முறைகளில் சுங்கச்சாவடிகளும் ஒன்றா?
சென்னையில் ஓடும் ஆட்டோ ரிக்ஷாக்கள் சிலவற்றில் ‘பிரசவத்துக்கு இலவசம்' என்று போடப்பட்டிருக்கும். வண்டியில் அத்தகைய விளம்பரம் செய்திருக்கும் ஓட்டுநரைப் பார்த்து மரியாதை செய்யத் தோன்றும். மனிதாபிமானம் மலிந்துவிட்ட இந்நாட்களில் இப்படியும் சில ஜீவன்கள் இருக்கிறார்களென்பது வியக்க வைக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்னாலும் இந்நாட்டில் அப்படிப்பட்ட செயலொன்றைச் செய்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. கர்ப்பிணிப் பெண்களைப் படகுகளில் இலவசமாக ஏற்றிச்செல்ல வேண்டுமென்ற கட்டளை கௌடில்யரால் அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செலவற்ற போக்குவரத்தை அனுமதித்த ஜீவகாருண்யச்
செயல்கள் இன்று அடையாளபூர்வமாகிவிட்டன.
பள்ளிக்கூட வரலாற்றுப் பாடங்களில் இந்தியப் பேரரசர்கள் பலர் நாட்டுக்குச் செய்த நன்மைகளின் பட்டியலில் நிச்சயம் நெடுஞ்சாலைகள் அமைத்து அதன் இருபுறமும் நிழல்தரும் மரங்களை வளர்த்து, பயணம் செய்வோர்க்கு உதவினர் என்பதும் இருக்கும். சாலையில் வாகனப் பயணம் மேற்கொள்வோரிடம் முப்பது மைல் தூரத்துக்கு ஒரு சாவடி அமைத்து சுங்கக் கட்டணம் வசூல் செய்வதுதான் 21-ம் நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்பு. வாகனங்கள் தடங்கலின்றிச் செல்ல முறையான சாலைகள் அமைத்து, உரிய முறையில் அவற்றை மேற்பார்வை செய்யும் அதிகாரம் அரசமைப்புச் சட்டப்படி மாநில அரசுகளைச் சார்ந்ததே. சாலைகளில் பயணிக்கும் வாகன உரிமையாளரிடமிருந்து மோட்டார் வாகன வரி வசூலிக்கப்பட்டு, அதன் மூலம் மாநில அரசுகள் சாலைகளைப் பராமரித்தன. மோட்டார் வாகன வரியைத் தவிர, நுழைவு வரி போன்ற வேறு சில மறைமுக வரிகளை விதிக்க முற்பட்ட மாநில அரசுகளின் சட்டங்கள் நீதிமன்றங்களின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. மாநில அரசுகள், தங்களது உள்ளாட்சி எல்லைகளினூடே வாகனங்கள் பெருமளவில் வந்துசெல்வதனால் சாலைகளுக்கு ஏற்படும் சேதாரங்களை ஈடுகட்டவும் சாலைகளைப் பராமரிக்கவும் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு வரி என்று பெயரிடப்பட்டிருந்தாலும் உண்மையிலேயே அவை சேவைக் கட்டணங்களே என்று வாதிட்டன. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வணிக நோக்கத் துக்காக இந்தியா முழுவதும் தடையின்றிப் பொருட் களை எடுத்துச்செல்ல வர்த்தகர்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருப்பதனால், நீதிமன்றங்கள் சாலையில் செல்வோரிடம் மாநில அரசுகளின் வரிச் சட்டங்களைக் கூர்மையாக ஆராய்ந்தன.
நுழைவு வரி என்பது வரியல்ல. அது ஒரு சேவைக் கட்டணம் என்ற அடிப்படையில் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்படுத்தி அந்தச் சட்டங்கள் செல்லத் தக்கன என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. வரி விதிப்பதற்கும், சேவைக் கட்டணம் வசூல்செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றங் கள், மாநில அரசு வசூலிக்கும் சேவைக் கட்டணம் உண்மையிலேயே அதற்காகக் கூறப்பட்ட காரணத் துக்காகவே செலவழிக்கப்படுகிறதா அல்லது அவை மறைமுக வரிகளா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரமும் நீதிமன்றங்களுக்கு உண்டென்று அறிவித்தன. மாநிலங்கள் இயற்றிய சட்டங்களைத் தவிர, மத்திய அரசும் தேசிய நெடுஞ்சாலை சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றியது. தேசிய நெடுஞ்சாலைகள் மாநில எல்லைகளையும் தாண்டிச்செல்வதால் அவற்றை அமைத்துப் பராமரிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உண்டென்று வலியுறுத்தியது. தனியார் சாவடிகள் அமைத்து வாகன ஓட்டுநர்களிடமிருந்து சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கும் நடைமுறை, கடந்த நூற்றாண்டு முடியும்வரை கொண்டுவரப்படவில்லை.
சாலைகளால் அழிக்கப்பட்ட இந்தியா
‘இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்துடன் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தை அமைக்க முற்பட்ட பா.ஜ.க. அரசு, நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் செயல் களைத் தனியாருக்குத் தாரைவார்த்தது. ‘கட்டு, சொந்த மாக்கிக்கொள், செயற்படுத்து (பின்னர் அரசிடம்) திருப்பிக்கொடு' என்ற முறையில் சாலைப் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார்மயப் படுத்தியது. அதில் பெரும் பயனடைந்த நிறுவனங் களில் அம்பானிகளின் ரிலையன்ஸ் நிறுவனமும் அடக்கம். சாலைகளை நேர்படுத்தி, விரிவுபடுத்துவதற் கான செலவை ஈடுகட்டிக்கொள்ள தேசிய நெடுஞ் சாலைகளில் சாவடி அமைத்து, சுங்கம் வசூலிக்கும் உரிமை அந்நிறுவனங்களுக்கு 15 ஆண்டுகள் வழங்கப் பட்டது. சாலை விரிவாக்கத்துக்கான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அதிகாரமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு வழங்கப்பட்டது. தங்க நாற்கரச் சாலைத் திட்டம் செயல்பட ஆரம்பித்துப் பல்லாண்டுகளாயினும், ஆயிரக் கணக்கான நிலவுடைமையாளர்களுக்கு நிலத்தைக் கையகப்படுத்தியதற்கான நஷ்டஈடு இன்னும் வழங்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் முயற்சியில் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வெட்டிச் சாய்க்கப் பட்டதில், சுற்றுச்சூழலுக்கு விளைந்த கேடும் சொல்லி மாளாது. மரங்களை வெட்டுவது தவிர்க்க இயலாதது என்று வாதிட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் ஈடுகட்ட பத்து மரங்களை நட்டுப் பராமரிக்கப்போவதாக நீதிமன்றங் களிடம் வாக்குறுதியளித்தது. அவர்கள் சொன்ன பத்து மரங்கள் வெறும் அரளிச்செடிகள்தான் என்பதை நீதிமன்றங்கள் புரிந்துகொள்ளப் பல மாதங்களானது. நீர்நிலைகளுக்கும் நீர்வரத்துப் பகுதிகளுக்கிடையே பல இடங்களில் போடப்பட்ட நெடுஞ்சாலைகள் கணிசமாக நீர்நிலைகளை வற்றிப்போகச் செய்ததுடன் விவசாயப் பணிகளையும் முடக்கின.
துண்டாடப்பட்ட கிராமங்கள்
தேசிய நெடுஞ்சாலைகள் இந்தியாவைப் பிணைத் துள்ளதாகக் கூறப்பட்டாலும் அச்சாலைகள் கடந்து செல்லும் கிராமங்கள் அனைத்தும் துண்டாடப் பட்டுள்ளன. நெடுஞ்சாலை செல்லும் பாதையிலுள்ள கிராமங்களைத் துண்டாடாமல் அவற்றை இணைக்கும் வகையில் மேம்பாலங்கள் ஓரிடத்திலும் அமைக்கப் படவில்லை. இங்கிலாந்தில், துண்டாடப்பட்ட ஒவ்வொரு கிராமத்தையும் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலை களுக்கு மேல் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருப் பதைக் காணலாம். சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக் கும் இடங்களில் பயணிகளுக்கான ஓய்வெடுக்கும் அறைகளும் கழிப்பறைகளும், சிற்றுண்டிக் கடைகளும் அமைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். ஆனால், இந்தியாவிலுள்ள நிலைமையோ தலைகீழ். துண்டு படுத்தப்பட்ட கிராம மக்கள் நெடுஞ்சாலையைக் கடக்க முற்படும்போது வாகனங்களால் மோதப்பட்டு உயிர்துறப் பதும், ஊனமடைவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
இந்தியா நெடுகிலும் வழவழப்பான சாலைகள் அமைத்தும் போக்குவரத்துச் சிக்கல்கள் தீராதது மட்டுமின்றிப் பல இடங்களில் சுமுகமான போக்குவரத் துக்கான தடைகள் நீடிக்கின்றன. டெல்லியில் குர்கான் அருகில் இருந்த சுங்கச்சாவடியில் அரியானாவிலிருந்து வரும் வாகனங்கள் பல மணி நேரம் காக்கவைக்கப் பட்டதில் சினமுற்ற டெல்லி நீதிமன்றம், சுங்கம் வசூலிக்கவே தடைவிதித்தது. சமீபத்தில் பரனூரில் சுங்கச்சாவடி அமைத்தது சட்டவிரோதம் என்று தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்றம் திடீரென்று அவ்வுத்தரவை ரத்துசெய்துவிட்டது. சுங்கச்சாவடிகளில் நடக்கும் வசூல் கொள்ளைகளை எதிர்த்து வரும் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன.
மக்களின் கோபம்
சென்னையிலிருந்து பெங்களுரூக்கு கிருஷ்ணகிரி வழியாக வாகனத்தில் செல்வோர் ஒன்பது சுங்கச் சாவடிகளில் கிட்டத்தட்ட ஒருவழிப்பயணத்துக்கு மட்டும் சுமார் 270 ரூபாய் சுங்கம் செலுத்தும் கேவலத்தை வேறெந்த நாட்டிலும் பார்க்க முடியாது. சென்ற ஆண்டு பள்ளிகொண்டா அருகில் ஒரு சாவடியில் சுங்கம் வசூலிக்க உரிமம் பெற்றவர் சுங்கக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியதில் அங்கிருந்த லாரி உரிமை யாளர்கள் கொதித்தெழுந்தனர். மன்றாடிய பின்னும் சுங்கக்கட்டணத்தில் மாற்றம் ஏற்படாததால், சுங்கச் சாவடியருகே 20 சென்ட் நிலத்தை அவர்களே விலைக்கு வாங்கி ஒரு மாற்றுப் பாதையை அமைத்துத் தங்கள் வாகனங்களைக் கொண்டுசெல்ல முற்பட்ட பிறகுதான், உரிமம் பெற்றவர் இறங்கிவந்து கட்டணத்தைக் குறைத்தார். இதற்குள், உயர்த்தப்பட்ட கட்டணத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் மகாராஷ் டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் இருந்த சுங்கச் சாவடிகளை எம்.என்.எஸ். கட்சியினர் அடித்து நொறுக்கினர். நாசிக் நகராட்சியிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமையைக் கொடுக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 15 வருடம் சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற்றவருக்கு மத்திய அரசு உரிமக் காலத்தை 30 ஆண்டுகள் நீட்டித்து வழங்கியது. அதன் பின்னணி ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கும் அதைப் பராமரிப்பதற்கும் உண்டான செலவினங்களைவிடப் பன்மடங்கு ஆதாயம் பார்த்துவிட்டன இந்த ஏற்பாடுகள். தனியார் நிறுவனங்கள் அரசு ஆதரவுடன் கோடிக் கணக்கில் சுங்கம் வசூலித்துக் கொள்ளையடித்துவருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்களுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு. நாசிக்கும் பள்ளிகொண்டாவும் எதிர் காலப் பாடத்தை நமக்குக் கற்பிக்கின்றன.
இந்தியா மிளிர உருவாக்கப்பட்ட நாற்கரச் சாலைகள், மக்களின் செல்வத்தைப் பெருமளவில் கொள்ளை யடித்துக்கொண்டிருக்கும் இரும்பு ஆக்டோபஸ்களாக மாறிவிட்டன. புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு, இந்தப் பிரச்சினையில் தனது கவனத்தைச் செலுத்துமா? அரசமைப்புச் சட்டப்படி, வாகனங்களின் தங்குதடையற்ற போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இரும்பு ஆக்டோபஸ்கள் அகற்றப்படுமா?
- சந்துரு, ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம், சமூக விமர்சகர்
Taken from TAMIL.THEHINDU.com
No comments:
Post a Comment