Wednesday, 30 July 2014

போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கை

பேரவையில்போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் .சவுந்தரராசன் பேசியது வருமாறு
சவுந்தரராசன்: அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறபோது வேலை செய்யவில்லை என்றால் சம்பளம் இல்லை என்ற நிலைதான் இருந்தது. ஆனால் இப்போது பதவி உயர்வை நிறுத்துவது, ஒய்வு பெறுவோரின் ஓய்வுக்கால பலன்களை கொடுக்கமறுப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தொழிலாளர் நலத்துறை இதில் தலையிட்டு வேலைசெய்யவில்லை என்றால் சம்பளம் கிடையாது என்ற விதிமுறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர மற்ற
நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று நிர்வாகத்திற்கு அறிவுறுத்திய பிறகும் போக்குவரத்து கழகங்கள் அதை அமல்படுத்த மறுக்கின்றன. எனவே இந்தப்பிரச்சனையில் அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: விதிமுறைப்படித்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சவுந்தரராசன்: குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளபோது ஒய்வுபெற்றவர்களின் ஓய்வூதிய பணப்பலன்களை நிறுத்துவது சட்டப்படி தவறாகும். இதுபோன்ற செயல்களில் நிர்வாகங்கள் ஈடுபடக்கூடாது. உதாரணத்திற்கு கும்பகோணம் டிஎஸ்டிசி நடத்துனர் ஜோதி என்பவரிடம் ஓய்வு பெற்றபிறகு 49ஆயிரத்து 450 ரூபாய் பிடித்தம் செய்துள்ளனர். ஓய்வு பெற்றவரிடம் பணம் வசூலிப்பது தவறு என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ‘‘நிர்வாகத்தின் நடவடிக்கை இந்திய அரசியல் சாசனத்தின் 14வதுபிரிவை மீறிய செயல் ’’ என்று கூறி பிடித்தம் செய்த பணத்தை 9 சதவீத வட்டியுடன் அந்த தொழிலாளிக்கு திரும்ப வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்த பிறகும் 31.05.2013ல் ஓய்வு பெற்ற கந்தசாமி என்ற ஓட்டுநரிடம் 3லட்சத்து 35ஆயிரத்து 560ம், இறந்து போன நடத்துனர் மணிமாறன் மனைவி ஹேமமாலினியிடம் 2லட்சத்து 26ஆயிரத்து 920ம் கட்டவேண்டும் என்று ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்திற்கு விரோதமான இந்த கொடுஞ்செயலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

அமைச்சர் செந்தில்பாலாஜி: தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் மீது ஏதேனும் புகார்கள் இருந்தால் ஓய்வூதிய பலன்கள் நிலுவையில் வைக்கப்படுகின்றன. ஒய்வு பெற்ற பிறகு தண்டனை உறுதி செய்யப்பட்டால் அதற்குரிய பணம் பிடித்தம் செய்யப்படுகின்றன. அதற்கு என்ன விதிகள் உள்ளதோ அதற்கு உட்பட்டுத்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
.சவுந்தரராசன்: போக்குவரத்துக் கழகங்களில் பல வழித்தடங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. உடனே நான் முதலமைச்சருக்கு அப்படி தனியார் மயமாக்கக்கூடாது என்று கடிதம் எழுதினேன்...
அமைச்சர் செந்தில்பாலாஜி: பத்திரிகைகளில் வரும் செய்திகள் எல்லாம் உண்மையாக இருக்குமேயானால் மக்களவைத்தேர்தலில் அதிமுக எப்படி 37 தொகுதிகளில் வெற்றி பெறமுடிந்தது? போக்குவரத்துக் கழக வழித்தடங்கள் தனியார்மயமாகிறது என்று தவறான செய்தி வெளியிட்ட அந்தப் பத்திரிகை மீது வழக்கு தொடர முதலமைச்சர் உத்தரவிட்டு அதற்குத் துறை சார்பில் தயாராகி வருகிறோம்.
.சவுந்தரராசன்: அந்தச் செய்திக்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்தால் மகிழ்ச்சிதான். எல்எஸ்எஸ்,. எக்ஸ்பிரஸ் கட்டணங்களை பொறுத்தவரை திருப்பூர் நகரில் 127 நகரப்பேருந்துகளில் 120 பேருந்துகள் எல்எஸ்எஸ் ஆகவும் 6 பேருந்துகள் எக்ஸ்பிரஸ் ஆகவும் ஒரே ஒரு பேருந்து சாதாரணப் பேருந்தாக இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதை அரசு ஆய்வு செய்து சாதாரணப் பேருந்துகளை அதிகமாக இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: கடந்த திமுக ஆட்சியில் இயக்கப்பட்ட சாதாரண கட்டண பேருந்தை விட 20682 பேருந்துகளை சாதாரண கட்டணத்தில் இயக்க முதல்வர் உத்தரவிட்டு இயக்கப்பட்டு வருகின்றன. நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளுக்கு சாதாரண கட்டணம், விரைவுக் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
.சவுந்தரராசன்: இப்போது நெடுஞ்சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் கழகத்தின் பேருந்துகள் சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டும் பணம் 150கோடி ரூபாய் ஆகும். இது ஒரு கி.மீட்டருக்கு 52 பைசாவாகும். வட்டியாக 468 கோடி கட்டப்படுகிறது. அதாவது ஒரு கி.மீ 140 பைசா செலவு செய்து கொண்டிருக்கிறோம். பஸ் ஸ்டாண்டிற்கு 29 கோடி செலவு செய்து கொண்டிருக்கிறோம். அதாவது ஒரு கி.மீட்டருக்கு 9 பைசா. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கெனவே நட்டத்தில் இயங்கி வருவதால் அரசு இதை ஈடுகட்ட பணம் வழங்கவேண்டும். அல்லது சமூகப் பொறுப்புடன் இயங்கக்கூடிய போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விதி விலக்கு அளிக்கவேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: டீசல் விலை உயர்ந்த பின்னர் பேருந்து உதிரிபாகங்கள்,. இயக்க செலவு ஆகியவை உயர்ந்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் டீசல் விலைஉயர்வால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மட்டும் 118கோடி ரூபாய் அதிகமாக செலவு ஏற்பட்டுள்ளது. இந்த கூடுதல்தொகையை ஈடுகட்ட முதல்வர் உத்தரவின்பேரில் டீசல் மானியமாக 819 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயன்பெறும் இலவச பஸ்பாஸ் திட்டத்திற்கு அரசு வழங்கியுள்ள தொகை 421 கோடி ரூபாய். 13-14 ஆண்டிற்கு வழங்கியுள்ள தொகை 652கோடி ரூபாய். கூடுதலாக 230கோடி ரூபாய் வழங்கி மக்களுடைய பயன்பாட்டிற்காக மாநில அரசு உதவியுள்ளது.
.சவுந்தரராசன்: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு முதலமைச்சர் இடைக்கால நிவாரணத்தை அறிவிக்க வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றபோது திமுகவின் தொமுச சங்க உறுப்பினர் எண்ணிக்கை 73ஆயிரத்து 480. கடந்த 30.6.14 அன்று உறுப்பினர் எண்ணிக்கை 18ஆயிரத்து 148ஆக குறைந்துள்ளது. நாங்கள் தான் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சங்கம் எங்களுடன்தான் நிர்வாகம் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும் என்று அந்த சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் பேச்சுவார்த்தை தாமதமாகிறதே தவிர அரசாங்கத்தால் அல்ல.

No comments:

Post a Comment