Saturday, 20 September 2014

அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள்

அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் கூடுதல் மைலேஜ் மற்றும் கூடுதல் கலெக்ஷன் கேட்டு அலுவலர்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர். "மைலேஜ்'க்காக வேகமாக செல்ல முடியாதபடி இன்ஜினில் அட்ஜெஸ்ட் செய்து விடுகின்றனர். 
அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் அனைத்தும் கட்டை வண்டியை போல் ஊர்ந்து செல்லும் நிலை காணப்படுவதால், நாளுக்கு நாள் கலெக்ஷனும் குறைந்து வருகிறது. தினமும் அவமானம் ஏற்படுவதால் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர். சில ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை தமிழக அரசு ஏற்றாத காரணத்தாலும், பெட்ரோல், டீசல் விலை பலமுறை ஏறிவிட்டதாலும், நஷ்டம் ஏற்படாமல் இருக்க போக்குவரத்துக்கழகம் பல்வேறு கெடுபிடிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. சமீப காலமாக போக்குவரத்து அலுவலர்களின் கெடுபிடி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரு பஸ், ஒரு லிட்டர் டீசலுக்கு ஆறு கிலோ மீட்டர் மைலேஜ் தரவேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். புது பஸ் மற்றும் பழைய பஸ் என எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. காயலான் கடைக்கு செல்லும் நிலையில் உள்ள பஸ் கூட குறிப்பிட்ட மைலேஜ் தரவேண்டும் என கட்டாயப்படுத்துவதால், பஸ் டிரைவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். "மைலேஜ்'க்காக கட்டை வண்டியை போல் அரசு பஸ்கள் ஊர்ந்து செல்வதால், பயணிகளின் எண்ணிக்கையும், கலெக்ஷனும் வேகமாக சரிந்து வருகிறது. 

இதே நிலை நீடித்தால், அரசு போக்குவரத்துக்கழகம் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என டிரைவர், கண்டக்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு போக்குவரத்துக்கழக டிரைவர், கண்டக்டர்களில் சிலர் கூறியதாவது: புது பஸ் வாங்கும்போது, அந்த பஸ் கம்பெனியே, "ஒரு லிட்டர் டீசலுக்கு அதிக பட்சம் ஐந்து கிலோ மீட்டர் தான் மைலேஜ் தரும்' என, உத்தரவாதம் தருகின்றன. ஆனால், அரசு போக்குவரத்துக்கழக பஸ் களில் குறைந்த பட்ச மைலேஜ் அளவே ஆறு கிலோ மீட்டர். இந்த மைலேஜ் வர வேண்டும் எனில் பஸ்சின் வேகம் 40 கிலோ மீட்டரை தாண்டக்கூடாது. ஆனால், 40 கிலோ மீட்டரை தாண்டாத பஸ்களில் பயணிகள் ஏற முன்வருவதில்லை. அதற்கு பதில் அரை மணி நேரம் வரை காத்திருந்து கூட தனியார் பஸ்களில் ஏறி விடுகின்றனர். தனியார் பஸ்களும் மைலேஜ் குறித்து கவலைப்படாமல், சராசரியாக 80 கி.மீ., வரை வேகம் செல்கின்றனர்.
அதிக பயணிகள் ஏறுவதால் அவர்களுக்கு அதிகப்படியான லாபமும் கிடைக்கிறது. 
அரசு பஸ்சில் அதிக வேகம் போகலாம் என டிரைவர் முயற்சித்தாலும் முடியாதபடி இன்ஜினிலும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து விடுகின்றனர். நாளுக்கு நாள் அரசு பஸ்களில் கலெக்ஷன் குறைந்து கொண்டே செல்கிறது. தற்போது, அனைத்து பஸ்களிலும் கலெக்ஷன் குறைவாக இருப்பது தெரிந்தும், ஒவ்வொரு பஸ் டிரைவர், கண்டக்டரிடமும், "உங்கள் பஸ்சில் மட்டும் தான் கலெக்ஷன் குறைந்துள்ளது' என, கடும் டோஸ் விழுகிறது. மைலேஜ் குறைந்தாலும் டோஸ், கலெக்ஷன் குறைந்தாலும் டோஸ் என தினந்தோறும் டிரைவர், கண்டக்டர்கள் திட்டு வாங்குவதிலேயே கழிகிறது. இந்த வெறுப்பை எல்லாம் சிலர் பயணிகளிடம் காட்டுவதால், பல இடங்களில் சண்டை சச்சரவு ஏற்படுகிறது. அது மட்டுமின்றி, பஸ்சில் பிரச்னை என்று பணிமனைக்கு சென்றால், "நீ காட்டும் கலெக்ஷனுக்கு இந்த கண்டிஷன் போதும்' என, கேவலமாக நடத்துகின்றனர்.
இந்த அவமான தாக்குதல்களால் டிரைவர், கண்டக்டர்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் கலெக்ஷன் காட்டும் பஸ் டிரைவர்களுக்காவது, மைலேஜ் விஷயத்தில் சிறிது விட்டுக்கொடுக்க வேண்டும். அதே போன்று வேகமாக செல்ல முடியாதவாறு செய்யப்பட்டுள்ள அட்ஜெஸ்ட் மென்டையும் உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு லிட் டருக்கு 10 கி.மீ., மைலேஜ் தந்தாலும், பயணிகள் யாரும் ஏற முன் வரமாட்டர். பெரும் நஷ்டத்தையே போக்குவரத்துக் கழகம் சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
இது குறித்து போக்குவரத்துகழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

பஸ்கள், 40 கி.மீ., வேகத்தில் சென்றால், உண்மையில் டீசல் இழப்பே ஏற்படும். பொதுவாக 60 கி.மீ., வேகத்தில் செல்லவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பஸ் புறப்பட்டவுடன் சடாரென வேகம் எடுப்பதால், அதிக டீசலும், இன்ஜினில் அதிக புகையும் உருவாகும். இதை தவிர்க்க டிரைவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட டிரைவர்கள் ஆறு கிலோ மீட்டர் மைலேஜை விட அதிகமாகவே காட்டுகின்றனர். கலெக்ஷன் நிர்ணயிப் பதும், அலட்சியப்போக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவே. மற்றபடி டிரைவர், கண்டக்டர்கள் டார்ச்சர் என கூறுவதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். எனினும், பொதுமக்கள், பஸ் ஊழியர் களின் புகார்கள் குவிவது குறையவில்லை. என்ன செய்யப்போகிறது அரசு போக்குவரத்துக் கழகம்?

No comments:

Post a Comment