Saturday, 4 July 2015

மேடையில் பேச........?

இதுவரை எந்த மேடையிலும் பேசியதில்லை, ஆனால், பேச வேண்டும் என்று ஆசை இருக்கின்றது, ஆனால் எப்படி பேசுவது என்று இருப்பவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு சிறிய பலனை தரும். மேடையில் ஏறி பேசுவது என்பது சின்ன விஷயமாக இல்லாவிட்டாலும், பயிற்சியாளர்களுக்கு மூலம் நம்மாலும் பெற்றுவிட முடியும். முதலில் நாம் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பழக வேண்டும். புதிதாக மேடை ஏறுபவர்களுக்கு, மேடையில் பேசுவது என்பது இரண்டாவது விஷயம். முதலில் அவர் மைக் முடிவு போய் நிற்பதே ரொம்ப முக்கியமான ஒன்றாகும். சில பேருக்கு பத்து பேர் இருந்தாலே உட்காருவதற்கு ஒரு கூச்சம், பயம். இதெல்லாம் இயல்பாகவே ஏற்படும். அதனால், நாம் மேடை ஏறியவுடனேயே நன்றாக பேச வேண்டும் என்பதில்லை. முதலில் நாம் மேடை ஏறி பழக வேண்டும். மேடைப் பேச்சைப் பொறுத்த வரை மூன்று விதமாக பிரிக்கலாம்:

1. மேடை ஏறிப் பழக வேண்டும்

2. பேசிப் பழக வேண்டும்

3. திட்டமிட்டு பேச வேண்டும்

இந்த மூன்றையும் நாம் வாழ்க்கையில் செயல்படுத்தினால் நம்மாலும் திறம்பட பேச்சாளராக செயல்பட முடியும். முதலில் மேடை ஏறிப் பழகுதல் பற்றி பார்ப்போம்.

1. சிறு சிறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அதில் கிடைக்கும் வாய்ப்புகளில் சின்ன சின்ன கருத்துக்களைப் பதிவு செய்து பழக வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டிகள், ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மேடையில் கூச்சம், பயம் போன்றவைகளை போக்கிப் பழக வேண்டும்.

மேடையில் எவ்வளவு பேர் அமர்ந்திருந்தாலும், நாமும் இந்த மேடையில் அமர தகுதியானவர்தான் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். அதேப்போன்று, மேடையில் அமர்ந்து இருப்பவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழக வேண்டும்.

ஒரு மேடையில் ஏறும்போது, நம்மிடம் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பதை சரிபார்த்து விட்டுச் செல்ல வேண்டும். இடையில் எழுந்து செல்வது போன்று நிலையை ஏற்படுத்தக் கூடாது.

மேடைப் பேச்சாளர்கள் எப்பொழுது கடிகாரம் கட்டியிருந்தால் குறித்த நேரத்தில் நம்முடைய உரையை முடிக்க முடியும். சிறு சிறு மேடைகளை நாமே உருவாக்கி, பழக வேண்டும். அப்பொழுது, மேடை என்பது, நமக்கு சாதாரணமாக போகிவிடும். நமக்கு முன் கீழே இருப்பவர்களுக்கு உட்கார தயக்கம் இல்லை என்கிறபோது, நாம் ஏன் அவர்களுக்கு முன் உட்காருவதற்கு அச்சப்பட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி விடலாம். இதனால்,மேடை ஏறிப் பழகிக் கொண்டே இருக்க வேண்டும். மேடையில் எந்தவிதப் பதற்றமுமின்றி அமரப் பழகிக் கொள்ள வேண்டும்.

2. பேசிப் பழகுதல்:

பேச்சாற்றல் என்பது உடனேயே வருவது என்பது சாத்தியமான ஒன்றல்ல. ஒரு சிலருக்கு இயல்பாகவே அவர்களுடைய பேச்சுத்திறன் சிறப்பாக அமைந்திருக்கும். அதனால், நாமும் அப்படி எதிர்பார்க்க முடியாது.

சாதாரணமாக நாம் ஒருவரிடம் பேசுவதற்கும், மேடையில் ஏறிப் பல்வேறு மனிதர்களுக்கு மத்தியில் பேசுவதற்கும் அதிகமான வித்தியாசங்கள் உள்ளன. அனதால், நாம் முதலில் கிடைக்கக்கூடிய மேடைகளில், தயக்கம் இல்லாமல் பேச வேண்டும். அதில், இருக்கக்கூடிய பிழைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பழக வேண்டும. பேசும் போதே நிறுத்தி நிதானமாக பேச முயற்சி செய்ய வேண்டும்.

அத்தோடு, மக்களைப் பார்த்து மேடையில் உள்ளவர்களை பார்த்து, அழகான முறையில் இயல்பாக பேச வேண்டும். நாம் பேசினால் மக்கள் கேட்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு பேச வேண்டும். அதோடு, நாம் பேசியதை ரெக்கார்டு செய்து, தனிமையில் இருந்து அதை நாம் கேட்க வேண்டும். நாம் எந்த இடத்தில் எப்படி பேசுகின்றோம். சீர்த்திருத்த வேண்டிய இடங்கள் எது என்பதுப்பற்றி, சிந்திக்க வேண்டும். அதோடல்லாமல் நம்முடைய சத்தத்தின் அளவு எந்த இடத்தில் உயர வேண்டும். எந்த இடத்தில் குறைக்க வேண்டும் என்பது பற்றியும் நுணுக்கமாக பார்த்து, அதை அடுத்த மேடையில் சீர்த்திருத்த முயற்சி செய்ய வேண்டும்.

இதுவெல்லாம், நம்முடைய மேடைப் பேச்சை அலங்கரிக்க செய்யும் பயிற்சிகளாகும். அதோடு, நீங்களாக ஒரு மேடையை உருவாக்கி பேசலாம். அதாவது, கண்ணாடியின் முன்பு, தனிமையில் நின்று, உங்களுடைய பெற்றோர்களுககு முன்பு பேசிப் பழகலாம். இதுவெல்லாம், உங்களுடைய பேச்சு திறமைக்கு வலுசேர்க்க உதவும்.

3. திட்டமிட்டு பேசுதல்:

மூன்றாவது நாம் திட்டமிட்டு பேசுதல் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுதான், நீங்கள் பேச்சாளர் என்பதற்கானவைகளை உங்களுக்கு முன் இருப்பவர்களிடம் நிரூபிக்கவும், அவர்களுக்கு நீங்கள் சொல்லக்கூடிய கருத்துக்களை உள்வாங்கவும், உங்களுக்கு பாராட்டுக்களை பெற்றுத் தரவும் உதவக்கூடியதாக இருக்கும்.

எல்லா மேடைகளிலும் நாம் விரும்பக்கூடியது பேசக்கூடிய வாய்ப்பு கிடைக்காது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு விதமான தலைப்புக்களில் நம்மை பேச அழைப்பார்கள். அதுபோன்று, நேரங்களில் நாம் அதற்கான தகவல்களை சேகரித்து, அந்த நிகழ்ச்சியின் கருத்து மாறிவிடாமல் பேசிப் பழக வேண்டும்.

அதோடு, நேரமும் முக்கியமான ஒன்றாகும். கொடுக்கப்பட்ட நேரத்தில், நாம் பேச வேண்டிய தலைப்புக்களில் பேச வேண்டும் என்றால், நம்மிடம் திட்டமிடல் இல்லாமல் அது சாத்தியமாகாது. நாம் பேச வேண்டிய தலைப்புக்கள் தொடர்பான ஆழமான வாசிப்புகள் இருக்க வேண்டும். தகவல் சேகரிப்பில் முழுமையாக ஈடுபட்டால்தான் நாம் அந்த உரையை நிகழ்த்த முடியும்.

அதோடு, நாம் ஒவ்வொரு சின்ன சின்ன தலைப்புகளாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தலைப்புக்கும் இவ்வளவு நேரம் என்று நேரத்தை குறித்து பேசிப் பழக வேண்டும். அவ்வாறு பேசிப் பழகும்போது,நமக்கு குறைவான நேரம் கொடுக்கப்பட்டாலும், அதிலும் நம்மால் முழுமையான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.

சில நேரங்கள் நாம் பேச வேண்டிய தகவல்களைக்கூட நமக்கு முன்னர் பேசக்கூடியவர் பேசிவிட்டு சென்றாலும்,நாம் அதை சமாளித்து பேசுவதற்குண்டான திறனை வளர்த்துக் கொண்டு, பேசி பழக வேண்டும்.

நாம் பேசப் போகும் மேடையின் மூலம், பல்வேறு மக்கள் அறிவுப் பெற்று, அவர்களிடம் ஒரு சுயமாற்றம் ஏற்பட வேண்டும என்ற எண்ணத்துடன் மேடைக்குச் செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment