Thursday, 5 January 2012

யாருக்காக யாருடைய லாபத்திற்காக இந்த நாடகம்?


பஸ்களில் விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளி, அடுத்தடுத்து மூன்று முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், யாருக்காக இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்படுகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒப்பந்த புள்ளிகள் ரத்து : தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும்
, சென்னையில், 1,400 பஸ்களுக்கு, ஜூன் 6ம் தேதி ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்டது. "பஸ்களைச் சுத்தம் செய்வதையும், நிபந்தனைகளில் சேர்க்க உள்ளோம்' என காரணம் கூறி, ஒப்பந்தம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அடுத்ததாக, 2011 ஜூலை 30ம் தேதி, புதிய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. தொழில்நுட்பப் பிரிவிலேயே தகுதியற்ற நிறுவனம், நீக்கப்படுவதற்குப்
பதிலாக, விலைப் புள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, அந்த நிறுவனத்துக்கே ஒப்பந்தமும் விடப்பட்டது.

கோர்ட்டில் வழக்கு : இதை எதிர்த்து, மற்ற நிறுவனங்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, வெற்றியும் பெற்றன. விடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, இரண்டாவதாக வந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தர வேண்டும் அல்லது புது ஒப்பந்தப் புள்ளி கோர வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டது. எதிர்பார்க்கப்பட்டது போலவே, இரண்டாவதாக
வந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தராமல், டிசம்பர் 23ம் தேதி, புதிய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. "குறிப்பிட்ட நிறுவனத்துக்கு தருவதற்காகத் தான், இப்படி இழுத்தடிக்கப்படுகிறோம்' என்பதைப் புரிந்து கொண்ட மற்ற நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட ஆதிக்கம் பெற்ற நிறுவன உரிமையாளருடன், ஐந்து நட்சத்திர ஓட்டலில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நிறுவனங்கள் அதிர்ச்சி : புதிய ஒப்பந்தப் புள்ளியில், ஆதிக்க நிறுவனம் விண்ணப்பிப்பதில்லை; மற்ற அனைத்து நிறுவனங்களும் இணைந்து விண்ணப்பிப்பது என, முடிவானது. மேலும், பஸ்சுக்கு இவ்வளவு என, குறிப்பிட்ட தொகையை ஆதிக்க நிறுவனத்துக்கு மற்றவர்கள் கொடுத்து விடுவது என, புரிந்துணர்வு ஏற்பட்டது. பேச்சு சுமூகமாக நடந்து, "சியர்ஸ்' சொல்லி, இரவே எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால், பேசியதற்கு மாறாக, ஆதிக்க நிறுவனம் மீண்டும் ஒப்பந்தம் கோரியது. அதிர்ச்சி அடைந்த பிற நிறுவனங்கள், கையைப் பிசைந்தன. விதிமுறைகளின்படி, தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளியில், ஆதிக்க நிறுவனம், வரைவோலை வைக்காததால், மீண்டும் அந்த நிறுவனம் நிராகரிக்கப்பட்டது. இதனால், போட்டியில் அடுத்து இருந்த நிறுவனத்துக்கு கொடுக்காமல், மூன்றாவது முறையாக ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து, வரும் 18ம் தேதிக்கு, புதிய ஒப்பந்தம் கோரியுள்ளார், சென்னை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்.

யாருக்காக? : சென்னையில், மொத்தம், 4,000 பஸ்கள் இயங்குகின்றன. இவற்றில், தற்போது வெறும், 600 பஸ்கள் மட்டுமே, அதிகாரப்பூர்வ பதாகைகளோடு உள்ளன. ஒரு பஸ்சுக்கு, மாதத்துக்கு, 2,000 ரூபாய் அளவில், ஒப்பந்தம் கோரப்படுகிறது. சந்தையில், 3,500 ரூபாய் வரை, மாத வாடகைக்கு விடப்படுகிறது. 3,400 பஸ்களுக்கு, மாத வாடகை, தலா, 2,200 ரூபாய் வீதம், ஆறு மாதத்துக்கு கணக்கிட்டால், இதுவரை இந்த ஒப்பந்த ரத்துகளால், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும், 4.49 கோடி ரூபாய். இந்த இழப்பு, யாருக்காக சகித்துக் கொள்ளப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

எல்லா டெண்டரும் ஒருவருக்கே? : "டிப்போ' வாரியாக விடப்படும் ஒப்பந்தப் புள்ளி, தொழில்நுட்பம், விலை என, இரண்டு வகையில் பிரிக்கப்படுகிறது. தொழில்நுட்பத்தில் தேறியவர்கள் மட்டுமே, விலைப் புள்ளிக்கு தகுதி பெறுவர். சென்னை தவிர, சேலம், ஈரோடு, கோவை, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் என, தமிழகத்தின் பெரும்பாலான, "டிப்போ'க்களில் உள்ள பஸ்களுக்கான ஒப்பந்தத்தை, கோவையைச் சேர்ந்த, நிறுவனம் எடுத்துள்ளது. அனைத்து, "டிப்போ'க்களிலும், இரண்டாவதாக வந்த நிறுவனத்தை விட, மிக சொற்பத் தொகை வித்தியாசத்தில் தான், ஒப்பந்தங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பெரிய லாபம் இல்லாததாலும், போட்டிக்கு வலுவானவர்கள் இல்லாததாலும், பிற பகுதிகளில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சென்னையில் மட்டும், சண்டையில் மண்டை உடைகிறது.
                                                                                     நன்றி தினமலர் 4.1.2012.

No comments:

Post a Comment