Sunday, 12 August 2012

அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம்


போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகள்: அனைத்துத் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!
சென்னை, ஆக.10-
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொழிலாளர் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. அரசும், நிர்வாகமும் தலையிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட் டங்கள் நடைபெறும் என அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுப் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) துணைத்தலைவர் எம்.சந்திரன் தலைமையில் 10ம் தேதி பல்லவன் சாலையில் (கலையரங்க வளாகத்தில்) அமைந்துள்ள சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்று சுமார் 15 மாதங்கள் ஆகியும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து, தொழிற்சங்கங்கள் அரசிடம் தனித் தனியாக மனு கொடுத்து நேரில் சந்தித்துபேசியும் இதுநாள் வரை தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. முதலமைச்சர் சட்ட மன்றத்தில் அறிவித்த அறிவிப்புகளைக்கூட அமலாக்குவதில் காலதாமதம் நீடிக்கிறது. ரிசர்வ்
தொழிலாளர்களுக்கு பணி எண் வழங்கி தினக்கூலி உத்தரவு வழங்குவதற்குகூட லஞ்சம் கொடுக்க வேண்டிய (ஆளுங்கட்சி சங்கத்திற்கு) துர்பாக்கிய நிலை போக்குவரத்துக் கழகங்களில் உருவெடுத்துள்ளது. இதுபோன்ற பிரச்சனைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு கீழ்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 22000 பேருந்துகள் இயங்கிவருகின்றன. மக்களின் பிரதான போக்குவரத்து தேவையை 80 சதவீதம் போக்குவரத்து கழகங்களே நிறைவேற்றி வருகின்றன. சமூக பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் கடும் ஆள் பற்றாக்குறை உள்ளது. ஒரு பகுதி தொழிலாளர்கள் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் பணிபுரிய நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றனர். பராமரிப்பில் புதிய நியமனம் இல்லாததால் அனைத்து கழகங்களிலும் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. பராமரிப்பு பிரிவில் ஊழியர்கள் மீது கடும் வேலைப்பளு திணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்து பராமரிப்பும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ரிசர்வ் தொழிலாளி என பெயர் சூட்டி எவ்வித நிரந்தரமும் இன்றி பணிபுரிகின்றனர். இவர்களுக்கு சட்டப் படியான ஊதியம் வழங்கப் படுவதில்லை. மிகக்குறைவான ஊதியத்தில் ஆண்டுக்கணக்கில் அத்துக்கூலிகளாக பணியில் உள்ளனர். ஊழியர்களின் ஓய்வூதியத்தில் தொடர்ந்து பிரச்சனை உள்ளது. கண்மூடித்தனமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. சிறிய தவறுக்குக்கூட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் நிலை உள்ளது. கடந் மூன்று ஆண்டுகளில் 1800 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெறும் தொழிலாளிகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம் என்ற தண்டனை வழங்கப்பட்டு, ஓய்வு பெறும்போது பல லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. சட்டங்களும், ஒப்பந்தங்களும் அப்பட்டமாக மீறப்படுகிறது. அனைத்து பிரச்சனைகளிலும் ‘பணம் கொடுத்தால்’ தான் ஊழியர் பிரச்சனை தீரும் என்கிற அளவுக்கு ஊழல் மயமாக்கப்பட்டு வருகிறது. தொழிலாளி பி.எப். லோன் பெறுவதற்குகூட லஞ்சம் கொடுக்க வேண்டுமென்ற அவலநிலை உருவாகியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் போக்குவரத்துக் கழகங்கள் மிக மோசமாக பராமரிக்கப்படுவதுடன் ஊழியர்களும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இப்பிரச்சனைகளைத் தீர்க்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து போராடியதன் விளைவாக கடந்த சட்டமன்றத் தொடரில் சட்டமன்ற விதி 110ன் கீழ் முதலமைச்சர் சில அறிவிப் புகளை வெளியிட்டார்.
அவ்வாறு அறிவித்த அறிவிப்புகளைக்கூட அமலாக் கவில்லை. ரிசர்வ் தொழிலாளி பணிநிரந்தரம், வாரிசுதாரர் பணிநிரந்தரம், ஒப்பந்தப்படி தினக்கூலி சம்பளம், ஒப்பந்தங்கள் அமலாகாமை, பென்சன் பிரச்சனைக்கு தீர்வு, பராமரிப்பு, அலுவலகப்பணி நியமனம், தேவையான ஓட்டுநர், நடத்துநர் நியமனம், இன்சென்டிவ், சுழல்முறை போஸ்டிங், தொழிலாளி ஓய்வு பெறும்போது பணிக்கொ டையில் தண்டனையை அமல்படுத்த முடியவில்லை எனக்கூறி ரூ.3,95,000 வரை பிடித்தம் செய்வது என்ற அதீத தண்டனைகள் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க அரசு முன்வரவேண்டும் என அனைத்து தொழிற்சங்க கூட்டம் அரசைக் கேட்டுக்கொள்கிறது.
அரசும், நிர்வாகங்களும் பிரச்சனையைத் தீர்க்க முன்வராவிட்டால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு, போக்குவரத்து தொழிலாளர்களை தயார்படுத்த ஆகஸ்ட் 24 அன்று அனைத்து தொழிற் சங்கங்கள் இணைந்து சென்னை பல்லவன் இல்லம் முன்பு நடைபெறும் வாயிற்கூட்டத்தில் தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென இக்கூட்டம் அறைகூவி அழைக்கிறது. இந்த அறிக்கையில் சிஐடியு, டி.டி.எஸ்.எப்., எச்.எம்.எஸ்., எம்.எல்.எப்., எல்.பி.எப்., ஏஐடியுசி, புரட்சியாளர் அம்பேத்கார் தொழிற்சங்க பேரவை ஆகிய அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கையொப்பமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment