Thursday, 4 October 2012

ஓட்டுநர் நடத்துனர்கள் பற்றாகுறை


·         ஓட்டுநர், நடத்துநர் பணிக்காக ஆள் எடுப்பதற்காக வேலைவாய்ப்பு
அலுவலகம் மூலம் 4 ஆயிரம் பேர் வரை அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால்
1000 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு வந்துள்ளனர். இவர்களில் தேர்வு 
செய்யப்பட்டவர்கள் சிலரும், பணியில் சேர விருப்பமில்லை என்று 
தெரிவித்து விட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
ஆள் பற்றாக்குறை காரணமாக மாநகரப் போக்குவரத்து கழக (எம்.டி.சி.) பணிமனைகளில் தினமும் 400 பஸ்கள் வரை இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுவது தெரியவந்துள்ளது.
அத்துடன் டீசல் விலையும் உயர்த்தப்பட்டிருப்பதால் கடும் வருவாய் இழப்பை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சந்தித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 3,497 பஸ்கள் உள்ளன. இவற்றில் 275 பஸ்கள் உபரி பஸ்கள். மீதமுள்ள 3,222 பஸ்கள் 748 வழித் தடங்களில் தினமும் இயக்கப்பட வேண்டும்.
ஆனால், இப்போது ஆள் பற்றாக்குறை காரணமாக மொத்தமுள்ள 25 பணிமனைகளில் தினமும் 200 முதல் 400 பஸ்கள் வரை இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால்,
சில பகுதிகளுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாததால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியது:
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிக்குத் தேர்வு செய்யப்படும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வேலைக்கு சேரும் முதல் நாளிலேயே பணியாளர் எண் வழங்கப்பட்டுவிடும்.
அன்று முதல் 240 நாள்கள் அவர் பணி முடித்தவுடன், அவருடைய பணி வரன்முறை செய்யப்பட்டு முழு ஊதியம் அவருக்கு வழங்கப்படும். அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.265 வீதம் வழங்கப்படும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறு ஒப்பந்தப்படி 240 நாள்கள் பணி முடித்தவுடன், பணி வரன்முறை செய்யப்படுவதில்லை. சேம ஊழியராக (ரிசர்வ்) அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை பணிபுரிந்த பின்னர் மட்டுமே, பணி வரன்முறை செய்யப்படுகின்றனர்
அதுவரை சேம ஊழியர்களுக்கான ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு தொடர்ச்சியாக பணி கொடுக்கப்படும் என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது.
இதுபோன்ற காரணங்களால், பஸ் டிரைவர் பணிக்கு வருவதற்கு பெரும்பாலானோர் தயக்கம் காட்டுகின்றனர். 2009-ல் இதுபோன்ற சிக்கல்களால், சில ஊழியர்கள் அரசு டிரைவர் பணியை விட்டு வேறு பணிக்குச் சென்று விட்டனர்.
இதுபோன்ற காரணங்களால் தினமும் 200 முதல் 400 பஸ்கள் இயக்கப்படாமல் மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இப்போதும், ஓட்டுநர், நடத்துநர் பணிக்காக ஆள் எடுப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 4 ஆயிரம் பேர் வரை அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 1000 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு வந்துள்ளனர். இவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சிலரும், பணியில் சேர விருப்பமில்லை என்று தெரிவித்து சென்று விட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது என்றார்.
இதுகுறித்து போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியூ) பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களில் முழுநேர டிரைவர், நடத்துநர்களுக்கு பஞ்சப்படி உள்ளிட்ட அனைத்து படிகளுடன் சேர்த்து, நாள் ஒன்றுக்கு ரூ.438 ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், இப்போது முழு நேர ஊழியருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.265 மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும் புதிதாக பணிக்குச் சேரும் ஊழியர், 4 ஆண்டுகளுக்குப் பிறகே பணி வரன்முறை செய்யப்படுகிறார். இந்த நிலைகளை மாற்றினால்தான், அரசு டிரைவர் பணிக்கு ஆள்கள் வருவார்கள்.

No comments:

Post a Comment