Saturday 15 December 2012

எச்சரிக்கை?



ரேசன் முறையை ஒழிக்க மன்மோகன் சிங் தீவிரம்

 மானியத்துடன் கூடிய பொருள்விநியோகத்திற்குப் பதிலாக நேரடிப் பணப் பட்டுவாடா என்ற பெயரில் நாட்டின் பொதுவிநியோக முறையை ஒழித்துக்கட்ட பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக களமிறங்கியிருக்கிறார். ‘போர்க்கால அடிப் படையில்’ பணப்பட்டு வாடா திட்டத்தை அமல் படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதகதியில் செய்து முடிக்குமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் பிர தமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மன்மோகன் சிங் அரசு, சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் திட்டங்களை வரிசையாக அறிவித்து வருகிறது. அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயர்வு, அந்நிய மூலதனத்திற்கு தாராளமாக நாட்டின் கதவுகள் திறப்பு, அனைத்தும் தனியார்மயம் என நாள்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டுவரும் மன்மோகன் அரசு, பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டும் நோக்கத்தோடு நேரடிப் பணப்பட்டுவாடா திட்டத்தை அறிவித்துள்ளது.நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு, ரேசன் பொருட் கள் உட்பட பல்வேறு திட்டங்களில் ஏழை, எளிய மக்களுக்கு அரசு மானியம் வழங்கி வருவதுதான் மிகப்பெரும் தடைக்கல்லாக இருக்கிறது என மன்மோகன் அரசு பகிரங்கமாகக் கூறியுள்ளது.

இந்த மானியங்கள் அனைத்தையும் படிப்படியாகவும் நிரந்தரமாகவும் ஒழித்துக் கட்டுவது என்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதனைச் செயல்படுத்தும் மிகப்பெரிய திட்டமே பணப்பட்டுவாடா திட்டம்.நாடு முழுவதும் ரேசன் கடைகளில் அளிக்கப்பட்டு வரும் உணவு தானியங்கள், எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், அரசின் மானியத்துடன் குறைந்தவிலையில் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடை களே நாட்டின் கோடானு கோடி மக்களின் வயிறுகளைக் காயவிடாமல் காப்பாற்றி வருகின்றன. இந்நிலையில் இப்பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நேரடியாக பணமாகவே கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கில் அரசே செலுத்திவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் அமலானவுடன் ரேசன் கடைகளில் மானியத்துடன் கூடிய பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டு விடும். எனவே வெறும் மானியத்தொகையை மட்டும் கொண்டு வெளிச்சந்தையில் மிகக்கடுமையான விலையில் விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலைமை ஏற்படும். இது நாடு முழுவதும் பசி, பட்டினியை அதிகரிக்கும். எனவே இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் உறுதிபட வலியுறுத்தி வருகின்றன. ஏழை, எளிய மக்களின் உணவுப்பாதுகாப்பை அழிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து போராட்ட வியூகங்களையும் வகுத்துள்ளன.

பிரதமர் தீவிரம்

ஆனால், அரசுத்தரப்பில் இத்திட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார். அரசுத்திட்டங்களைச் செயல்படுத்த முன்னெப்போதும் செலுத்தப்படாத அளவிற்கு இத்திட்டத்திற்கு மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டத்தை ஆதார் அடையாள எண்களின் அடிப்படையிலேயே செயல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதால், அதற்கான பணிகளை விரைவு படுத்துமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.முதல்கட்டமாக 8 மாநிலங்களில் 51 மாவட்டங்களில் இத்திட்டம் அமலாகிறது. தற்போது தேர்தல் நடைபெற்றுள்ள குஜராத் மற்றும்இமாச்சலப்பிரதேசம் ஆகிய இருமாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்கள் தவிர இதர 43 மாவட்டங்களில் ஆதார் அடையாள அட்டை வழங்குதல், ஆதார் எண்களை ஒதுக்கீடு செய்வது போன்ற பணிகளை உடனடியாக முடிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பயிற்சி முகாமும் நடத்தப்படுகிறது. ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு விபரங்கள் போன்றவற்றுடன் கூடிய தனிப்படிவத்தை தயார் செய்வதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் நிதி சேவைத்துறை பொறுப்பேற்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக      தில்லியில் வெள்ளியன்று, பிரதமர் அமைத்துள்ள சிறப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்தியஅரசு மூலம் செயல் படுத்தப்படும் 34 திட்டங்களில் நேரடிப்பணப்பட்டு வாடா முறை ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் திட்டங்களுக்கு இப்போது நடை முறையில் இருப்பது போல் மாநில அரசுகள் வாயிலாக நிதிப்பரிமாற்றம் செய்யப்படும். ஆனால் மத்தியஅரசு நேரடியாக செயல்படுத்தும் திட்டங்களில் நேரடியாகவே பணம் பட்டுவாடா செய்யப்படும். இத்திட்டத்தின் கணக்குகள் அனைத்தையும் மத்திய நிதியமைச்சகத்தின் செலவுத்துறை பராமரிக்க வேண்டும் என்றும் இப்போது நிலுவையிலுள்ள சட்டங்க ளில் இதற்குத் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பயனாளி 18 வயதிற்கு கீழ் உள்ளவராக இருந்தால் அவரது தாயின் ஆதார் எண் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கலாம்; ஆதார் எண்கள் வழங்குவதற்கு வங்கிகளே பதிவாளர் களாக செயல்படும் என்றும் மேற்கண்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தீக்கதிர் செய்தி.

No comments:

Post a Comment