தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பான்டீ சத்தா என்கிற குரு பிரீத் சிங் சத்தாவும் அவரது தம்பி ஹர்தீப் சத்தாவும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு இறந்தார்கள். இரண்டு சமூகவிரோதிகள் மடிந்ததை, இந்தியாவின் அத்தனை தேசிய நாளிதழ்களிலும் முதல் பக்கச் செய்தியாக, சில பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்படும் அளவுக்கு அந்தக் கொலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றால் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
பான்டீ சத்தாவினுடைய வர்த்தகக் குழுமத்தின் ஆண்டுக்கான பற்றுவரவு 6,000 கோடி ரூபாயிலிருந்து 20,000 கோடி ரூபாய் வரை. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரேந்திர சிங்,
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, முலாயம் சிங் யாதவ் போன்றோருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் பான்டீ சத்தா. அவரது "வேவ்' (அலைகள்) குழுமம் செய்யாத தொழில்கள் இல்லை. கை வைக்காத துறைகள் இல்லை.
பஞ்சாபில் உள்ள மொஹாலியில் 264 ஏக்கர் பரப்பில் "பேர்லேக்ஸ்' என்றொரு ஒரு துணை நகரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. காஜியாபாதில் 4,800 ஏக்கரில் "ஹை - டெக் சிட்டி' என்கிற குட்டி நகரத்தை உருவாக்கி வருகிறது அவரது நிறுவனம். "கேரா டௌன் பிளானர்ஸ்' என்கிற நிறுவனத்தின் மூலம் ஜெய்ப்பூருக்கு அருகில் 125 ஏக்கரில் ஒரு நவீன குடியிருப்பு உருவாகி வருகிறது. மொராதாபாத் நகரில் 52 ஏக்கரில் "வேவ் கிரீன்ஸ்' என்கிற குடியிருப்பும், கிரேட்டர் நொய்டாவில் 29 ஏக்கரில் "புல்மேரியா கார்டன் எஸ்டேட்' என்ற பெயரில் ஒரு குடியிருப்பும் உருவாகி வருகிறது. இவை அனைத்தும் பான்டீ சத்தாவின் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுபவை. இத்துடன் முடிந்துவிடவில்லை பான்டீ சத்தாவின் வியாபார சாம்ராஜ்யம். வடநாட்டிலேயே மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளர் பான்டீ சத்தாவாகத்தான் இருப்பார். உத்தரப் பிரதேசத்தில் ஏழு சர்க்கரை ஆலைகளும், பஞ்சாபில் ஒரு சர்க்கரை ஆலையும் அவருக்கு இருக்கின்றன. 2007-இல் அன்றைய மாயாவதி அரசு இயங்கிக் கொண்டிருந்த பத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைத் தனிநபர் மயமாக்கத் தீர்மானித்தது. அவற்றில் 5 சர்க்கரை ஆலைகள் மிகக் குறைந்த விலைக்கு பான்டீ சத்தாவின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதுபற்றிக் கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் அரசுக்கு ரூ. 1,200 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கொடுத்த அறிக்கை தூசு பிடித்துக் கொண்டிருக்கிறது.
"வேவ்' என்கிற பெயரில் மதுபானங்கள் தயாரிக்கும் பான்டீயின் நிறுவனம் பல சர்க்கரை ஆலைகளை வைத்திருப்பதுடன், வடநாட்டில் கோகோ கோலாவின் உரிமம் பெற்ற உற்பத்தியாளரும்கூட. மூன்று காகிதத் தொழிற்சாலைகள் வைத்திருப்பதுடன், 2,500-க்கும் அதிகமான சில்லறை மதுபான விற்பனைக் கடைகளும் இந்தக் குழுமத்துக்குச் சொந்தம். திரைப்படத் துறையையும் விட்டு வைக்கவில்லை பான்டீ சத்தா. திரைப்பட விநியோகம், தயாரிப்பு என்று மும்பை திரையுலகத்திலும் அசைக்க முடியாத சக்தியாக இந்தக் குழுமம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவந்தது.
இவ்வளவு கதைகளும், பான்டீ சத்தாவின் வீரதீரப் பிரதாபங்களும் எதற்காக என்று கேட்டுவிட வேண்டாம். பான்டீ சத்தா ஒன்றும் பரம்பரைப் பணக்காரரோ, பல ஆண்டுகள் உழைத்து ஒரு மிகப்பெரிய குழுமத்தை உருவாக்கிய தொழிலதிபரோ அல்ல என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று.
பான்டீ சத்தாவின் தந்தை குல்வந்த் சிங் சாராயக் கடை ஒன்றின் அருகில் சோடா, நொறுக்குத் தீனி, ஆம்லெட், வேகவைத்த முட்டை, சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவருக்குத் துணையாக பான்டீ சத்தாவும் சகோதரர்களும் பணியாற்றி வந்தனர். குல்வந்த்சிங்கிற்கு ஒரு சாராயக் கடை உரிமம் கிடைத்ததிலிருந்து வியாபாரம் கொழிக்க ஆரம்பித்தது. அதற்கு முக்கியமான காரணம், பான்டீ சத்தாவும் சகோதரர்களும் எந்தவித அடிதடிக்கும் தயாராக இருந்ததும், அடியாள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்ததும்தான்.
அப்பா குல்வந்த் சிங்கின் மரணத்திற்குப் பின் குடும்பம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சகோதரர்கள் ஒற்றுமையாக வியாபாரம் செய்ய வேண்டுமென்றும் அவர்களது தாயார் பிடிவாதமாக இருந்தார். பான்டீ சத்தாவின் மகன் குர்தீப் தலையெடுக்கும்வரை எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. அதற்குப்பின் பான்டீ சத்தாவுக்கும் அவரது கடைசித் தம்பி ஹர்தீப்புக்கும் இடையிலான உறவு சரியாக இல்லை. ரூ. 1,200 கோடி தந்து ஹர்தீப்பை ஒதுக்கிவிட பான்டீ சத்தா தீர்மானித்திருந்த நிலையில்தான் ஹர்தீப் அண்ணனைச் சுட, அவர் திரும்பச் சுட, இருவரும் இறந்து விட்டனர்.
பான்டீ சத்தாவின் கொலையை விடுவோம். அது ஏதோ உத்தரப்பிரதேசம் தொடர்பான ஒன்று என்று தள்ளிவிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் பான்டீ சத்தாக்கள் உருவாகி இருக்கிறார்கள் என்பதுதானே நிஜம்? கடந்த 20 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களான பலரும் பான்டீ சத்தாக்கள்தான் என்பதுதானே நிஜம்? மாயாவதி ஆண்டாலும் முலாயம் சிங் ஆண்டாலும் ஆட்சி மாற்றத்தால் பாதிக்கப்படாத பான்டீ சத்தாக்கள் எல்லா மாநிலங்களிலும் பெருகி விட்டதுதானே நிஜம்?
சாராயம் விற்றுக் கொண்டிருந்தவர்கள், தொழிலதிபர்களாகி விடுகிறார்கள். தொழிலதிபர்களானவுடன் பள்ளிகளையும், கல்லூரிகளையும் கட்டி "கல்வித் தந்தை' என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்கிறார்கள். முடிந்தால் அரசியல் கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ., எம்.பி., ஏன் அமைச்சர்களே கூட ஆகிவிட முடிகிறது.சொந்தக் கட்சி தொடங்கி விடுகிறார்கள். கேட்டால் எல்லாமே சட்டப்படிதான் செய்திருக்கிறோம் என்கிறார்கள்.
÷ராபர்ட் வதேராவிலிருந்து நிதின் கட்கரியிலிருந்து, அத்தனை பேரும் சொல்வது அதைத்தான். 30% வருமான வரி கட்டிவிட்டால் எதுவும் சட்டப்படியாகிவிடும், அப்படித்தானே? ஒருவர் எப்படி சம்பாதித்தார் என்று தெரிந்துகொள்ள விரும்பினால், அது தனிமனித உரிமையில் தலையிடுவதாகிவிடும், அப்படித்தானே?
அரசியல்வாதிகளின் துணையில்லாமல் இவர்களால் பணக்காரர்களாகி இருக்க முடியாது. இவர்களது துணையில்லாமல் நமது அரசியல்வாதிகளால் பொதுவாழ்க்கையில் தொடர முடியாது. அதுதான் சுதந்திரம் என்றால், எதற்காகத் தேர்தல், ஜனநாயகம் என்றெல்லாம் போலி வேஷம் போட வேண்டும்? யார் கொள்ளையடிப்பது, வசூலைப் பெறுவது என்பதற்கு வாக்குகளால் ஏலம் போடுவதற்குப் பெயர்தான் ஜனநாயகமா?
தினமணி
No comments:
Post a Comment