Saturday, 27 July 2013

போக்குவரத்து தொழிலாளர்களின் அவலநிலை



தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை போக்குவரத்து கோட்டங்கள் உள்ளன. இந்த கோட்டங்களில் 20 ஆயிரத்து 500 பஸ்கள் உள்ளன. ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 300 தொழிலாளர்கள் உள்ளனர். போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மாநிலம் முழுவதும் 46 ஆயிரம் பேர் உள்ளனர்.

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஓய்வு பெற்றால், ஓய்வு பெறும் நாளில் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுமுறை சம்பளம் போன்றவற்றிற்கான காசோலையை கையில் வழங்கி, மாலை, மாரியாதை செய்து வீட்டில் கொண்டு போய் விடுவது வழக்கம். அந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது ஓய்வு பெற்றால் சால்வை போட்டு கைகுலுக்குவதோடு சரி. கூடுதலாக அரை கிலோ இனிப்பு, அரை கிலோ காரம், 3 பாத்திரங்கள் (சம்பளம்) வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். அதிலும் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு அந்த மரியாதையும் இல்லை. வெள்ளை பேப்பரில் ‘நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள்‘ என்று எழுதி தருவதோடு சரி.
பணிக்கொடை, விடுமுறை சம்பளம், வருங்கால வைப்பு நிதி பற்றி எதுவும் தெரியாமலேயே தொழிலாளி வீட்டிற்கு போகிறார். ஓய்வுக்கு பிறகு நிம்மதியாக வீட்டில் குடும்பத்துடன் பொழுதை கழிக்க வேண்டிய அவருக்கு அதன் பிறகு தான் வேலையே ஆரம்பிக்கிறது. தனக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடை, பென்சன், விடுமுறை சம்பளத்திற்கு போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு தினமும் படியேறுகிறார். தள்ளாத வயதில் நடையாய் நடந்து ஒவ்வொரு அதிகாரிகளாக சந்தித்து குமுறலை கொட்டுகின்றனர். இருப்பினும் அவர்களின் கோரிக்கை, கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது.

பணிக்கொடை பணம் (கிராஜூவிட்டி) ஓய்வு பெற்ற 30 நாட்களுக்குள் தொழிலாளிக்கு வழங்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. 2011 மே மாதம்
முதல் ஓய்வு பெற்ற 7 ஆயிரத்து 80 பேருக்கு ரூ.260 கோடியே 20 லட்சம் பணிக்கொடை பாக்கி உள்ளது. வருங்கால வைப்பு நிதி பணம் ஆயிரத்து 400 பேருக்கு ரூ.28 கோடியே 82 லட்சம் பாக்கி வைத்துள்ளனர். விடுமுறை ஊதியம் 2010 டிசம்பர் முதல் வழங்கவில்லை. மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்து 40 பேருக்கு ரூ.70 கோடியே 93 லட்சம் விடுமுறை ஊதியம் கடந்த 3 ஆண்டாக வழங்கப்படாமல் உள்ளது. பென்சன் ஒப்படைப்பு பணம் 2011 ஜூலை மாதம் முதல் தொழிலாளர்களுக்கு தரவில்லை. வருங்கால வைப்பு நிதி ஓய்வு பெறும் நாளன்றே தர வேண்டும். மே மாதம் முதல் வழங்கவில்லை. விடுமுறை கால ஊதியம் 2011 ஜனவரி மாதத்திலிருந்து பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வழங்குவதற்காக, பணியில் உள்ள ஊழியர்களின் சம்பளத்தில் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. அந்தப்பணத்தையும் வழங்குவதில்லை. வருங்கால வைப்பு நிதிக்காக தொழிலாளர்களின் ஊதியத்தில் மாதம் தோறும் குறிப்பிட்ட அளவு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அதை போக்குவரத்து கழகங்களுக்கான வருங்கால வைப்பு நிதி கழகத்தில் செலுத்துவது இல்லை. வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தியிருந்தால் அவர்களே ஓய்வு பெறும் நாளில் எவ்வளவு பணம் தர வேண்டும் என்பதை கணக்கிட்டு செக் போட்டு வழங்கி விடுவார்கள். ஆனால் நிதி இல்லாததை காரணம் காட்டி போக்குவரத்து கழகங்கள் வருங்கால வைப்பு நிதியை அலுவலகத்தில் கட்டுவதில்லை. இதனால் தொழிலாளர்களுக்கு ஆயிரக்கணக்கில் நிதி இழப்பு ஏற்படுகிறது.

கடந்த மூன்றாண்டாக தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில தொழிலாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பணிக்கொடை பணத்திற்காக தீர்ப்பை பெற்றாலும் போக்குவரத்து கழக நிர்வாகம் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதால் பாதிப்பு தொழிலாளர்களுக்கு தான். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு 72 முதல் 80 சதவீத பஞ்சப்படி உயர்வை தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த அறிவிப்பு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பஞ்சப்படி உயர்வு சலுகையை மே மாதத்திலிருந்து பெற்று வருகின்றனர். ஏப்ரல் மாதத்திற்கான பஞ்சப்படி உயர்வும் பெற்றுள்ளனர். ஆனால், அரசு இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை என்று கூறி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்காமல் உள்ளனர். பணியில் உள்ளவர்களுக்கு பணி ஒப்படைப்பு பணம் 2010 முதல் வழங்காமல் வைத்துள்ளனர்.

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க மாநில துணைப்பொதுச் செயலாளர் தேவராஜ் கூறுகையில், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக கடுமையான போராட்டத்தை சந்தித்து வருகின்றனர். கிடைக்க வேண்டிய சலுகையை பெறுவதற்கு பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளோம். அதன் பிறகும் தீர்வு ஏற்படவில்லை. பென்சன் ஒப்படைப்பு தொகை, சென்னையில் முதல்வர் விழாவில் வைத்து வழங்குவதாக தெரிவித்தனர். அந்த விழா ரத்தாகியுள்ளது. பென்சன் ஒப்படைப்பு பணம் எப்போது கிடைக்குமோ?போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகின்றனர். மின்வாரியமும் நஷ்டத்தில் இயங்குகிறது. மின்வாரிய தொழிலாளர்கள் ஓய்வு பெற்றால் பணிக்கொடை உடனடியாக வழங்குகின்றனர். ஆனால், போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை, நிர்வாக செலவுக்கு பயன்படுத்தி தொழிலாளர்களை வாட்டி வதைக்கின்றனர். தொழிலாளர்கள் நொடிந்து போய் உள்ளனர் என்றார்.

சேம நல நிதி திடீர் நிறுத்தம்:

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேமநல நிதி திடீரென நிறுத்தப்பட்டது, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 1992ம் ஆண்டு தொழிற்சங்கம், நிர்வாகம் மற்றும் அரசு பிரதிநிதிகள் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு சேமநல நிதி வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்காக ஒவ்வொரு தொழிலாளியிடம் இருந்தும் ஓய்வு பெறும் வரை மாதம் ரூ.50 பிடித்தம் செய்வது, ஒவ்வொரு தொழிலாளிக்கும் நிர்வாகம் மொத்தமாக ஆயிரம் ரூபாய் வழங்குவது, இந்த தொகையை வங்கியில் டெபாசிட் செய்து வட்டியை வைத்து தொழிலாளிக்கு பென்சன் வழங்குவது இத்திட்டத்தின் அம்சம்.

இத்திட்டத்தில் பென்சன் பெறும் தொழிலாளி, ஓய்வுக்கு பிறகு இறந்தால் வாரிசுதாரருக்கு 15 ஆண்டுக்கு சேமநலநிதி வழங்கப்படும். பணியின் போது இறந்தால், வாரிசுதாரருக்கு ரூ.300 மட்டும் வழங்கப்படும். முத்தரப்பு ஒப்பந்தத்தில் தொழிலாளிக்கு ஆயுள் முழுவதும் வரை சேமநல நிதி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேமநலநிதியை 15 ஆண்டுக்கு மட்டும் வழங்கிவிட்டு நிறுத்திவிட்டனர். இதை எதிர்த்து ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த ஒய்வு பெற்ற தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

அனுபவிக்காமலேயே மரணம்:

தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு போக்குவரத்து மானிய கோரிக்கையில், போக்குவரத்து கழக ஓய்வு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகை குறித்த அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. அதில், ஓய்வு ஊழியர்களுக்கு 2013ம் ஆண்டு வரை கொடுக்க வேண்டிய பணப்பலன்களுக்கு தேவையான நிதி அரசு ஒதுக்கியிருப்பதாக கூறப்பட்டிருந்தது. தமிழக அரசின் ஓராண்டு சாதனையிலும் இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. இருப்பினும் ஓய்வூதியர்களுக்கு இன்னும் பணப்பலன்கள் கிடைக்கவில்லை.
போக்குவரத்து தொழிலாளர்கள் விபத்தை சந்திக்காமல் ஓய்வு பெறுவது குதிரை கொம்பான விஷயம். இவர்களின் உடல்நிலையும் 50 வயதிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது. தினமும் பஸ் பயணம், ஓட்டல் சாப்பாடு, அதிக நேரம் வேலை பார்த்தல் போன்றவற்றால் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற சில ஆண்டுகளிலேயே உடல் நலிவுற்று இயற்கை மரணத்தை தழுவி விடுகின்றனர். இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பணத்தை வாங்கி அனுபவிக்க முடியாமல் இறந்து விடும் அவல நிலை தொடர்கிறது.

2013-06-23 தினகரன் நாளிதழ் செய்தி

No comments:

Post a Comment