Monday, 22 December 2014

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்

டிச.29 முதல் போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்
அனைத்து சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு



டிசம்பர் 29ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளன.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்க பேரவைகளின் கூட்டுக்கூட்டம் திங்களன்று தொமுச பொதுச் செயலாளர் எம்.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. தொமுச பேரவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்(சிஐடியு) , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம்(ஏஐடியுசி) மற்றும் ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., டி.எம்.டி.எஸ்.பி., டி.டி.எஸ்.எப்., பி.எம்.எஸ்., பி.எம்.கே., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எப். ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இவர்கள் கூட்டாக கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1,43,000 தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் 31.8.2013ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. புதிய ஒப்பந்தத்திற்கான கோரிக்கையை அனைத்து தொழிற்சங்கங்களும் அரசிடம் அளித்துவிட்டன. ஊதிய ஒப்பந்தம் மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. போக்குவரத்துக் கழகங்கள் சேவைத்துறை என்ற அடிப்படையில் அரசு எவ்வித நிதியுதவியும் செய்வதில்லை.தொழிலாளர்களின் பணம் ரூ.4000 கோடியை வைத்து போக்குவரத்துக் கழகங்களை அரசு நடத்துகிறது. தொழிலாளர்களின் சேமிப்பு பணம் முழுவதையும் அரசு செலவு செய்துவிட்டதால் ஓய்வுபெற்ற ஊழியர்கள் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
20,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆண்டுக்கணக்கில் அத்துக்கூலியாக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்தப்படி வழங்கப்படவேண்டிய ஊதியம் தினம் ரூ.560,ஆனால் ரூ.230 மட்டும் சம்பளமாக வழங்கப்படுகின்றது. தற்போதைய இடைக்கால நிவாரண அறிவிப்பில் கூட இந்த தொழிலாளர்களுக்கும் எவ்வித பலனும்இல்லை. தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டது. மோசமான அளவில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகளும் ஆளும்கட்சியும் இணைந்து கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர். 50 சதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பழுதடைந்துவிட்டது.எனவே போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். ஊதிய பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும். தினக்கூலி, ரிசர்வ் தொழிலாளர்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி அனைத்து சங்கங்களும் தொடர் இயக்கங்களை நடத்தின. கடந்த 5.9.2014ம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பும் கொடுத்தன.அரசு, தொழிற்சங்கங்களை அழைத்து பிரச்சனையை பேசி தீர்ப்பதற்கு பதில், திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
1.9.2013ம் தேதி முதல் ஊதிய ஒப்பந்தம் வரவேண்டிய நிலையில் 1.1.2015 முதல் இடைக்கால நிவாரணம் ரூ.1000 என அறிவித்ததுடன் வழக்கு நடைபெறுவதால் பேச்சுவார்த்தையை நடத்த இயலவில்லை என தவறான தகவலை கூறுகிறது.எனவே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துதான் நியாயங்களை பெறவேண்டிய கட்டாயத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம், தமிழக மக்களை பாதிக்கும் என்ற நிலையிலும், பொதுமக்கள் தொழிலாளர்களின் நியாயங்களை புரிந்துகொண்டு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தர வேண்டுகிறோம்.26.12.2014ம் தேதி சென்னை பல்லவன் இல்லம் முன்பு வேலைநிறுத்த விளக்க கூட்டம் நடைபெறும்.29.12.2014ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வது என இக்கூட்டம் ஏகமனதாக முடிவு செய்கிறது.
நியாயங்களை வென்றெடுக்க தொழிலாளர்களை சங்கபேதமின்றி வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment