Tuesday, 28 February 2012

சாலையோர உணவகங்கள் பயணிகளிடம் கொள்ளை

           

                  அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் - மோட்டல் வியாபாரிகள் கூட்டு? சாலையோர உணவகங்கள் பயணிகளிடம் கொள்ளை தமிழகத்தில் நீண்ட தூர பேருந்து சேவையில் அரசு விரைவு போக்குவரத்துகழகம் மற்றும் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழக பேருந்துகளும் செயல்படுகின்றன. இது தவிர்த்து தனியார் ஆம்னி பேருந்துகள் என தினசரி லட்சக் கணக்கான பயணிகள்
மாநிலத்தின் நெடிய சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கின்றன. பயணக் களைப்பில் பசியாறவும், களைப்பு மற்றும் உடல் சோர்வைப் போக்கவும் சாலையோர உணவகங்களில் பேருந்துகள் நிற்பதுண்டு. தேர்வு செய்ய வேறுவாய்ப்பு பயணிகளுக்கு இல்லாதபோது அதிகமான விலைகொடுத்து டீ, காபி, டிபன், குளிர்பானங்கள் வாங்குவதும், புலம்பிக் கொண்டே தரமோ சுவையோ இல்லாத உணவுவகைகளை சாப்பிடவும் நேர்கிறது. குறிப்பிட்ட உணவகங்களில் குறிப்பிட்ட பேருந்துகள் நிற்பதற்கு காரணம் அங்கு ஓட்டுநர், நடத்து நர்களுக்கு இலவசமாக டீ, காபி, டிபன் தருவது மட்டுமே என்பது ஊரறிந்த ரகசியம். இதனை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், இதன் மூலம் அரசுப்போக்குவரத்துக்கழகத்திற்கு வருமானம் பார்க்கிறோம் என்றும் கழகத்தின் வணிகப்பிரிவுகள் களமிறங்கின.                                          கொந்தளிப்பு: டெபாசிட் தொகை ரூ.10 லட்சம் முதல் 12 லட்சம் வரை செலுத்த வேண்டும். தினசரி குறிப்பிட்ட பேருந்துகள் அந்தந்த கடைகளில் நிறுத்தப்படும். ஒரு வண்டிக்கு ரூ.40, ரூ.45, ரூ.55 என ஏதோ ஒரு கணக்கில் மாதாந்திர தொகை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று வரையறுத்தனர். கடந்த 2012 ஜனவரி 10 அன்று இந்த அறிவிப்பு வெளியானது. பின்னர் பிப்ரவரி 10 முதல் கராராக அமல்படுத்தப்படுவது என்ற பெயரில் உணவகங்களில் கட்டாயம் பேருந்துகளை நிறுத்த வேண்டும் அதற்கு சான்றாக அக்கடை உரிமையாளரிடம் இன் வாய்சில் முத்திரையுடன் கையெழுத்துப் பெற்றுத்தர வேண்டும் என்ற உத்தரவை அரசுப்போக்குவரத்து கழக கிளைகள் வெளி யிட்டன. “இன்வாய்சில், பயண ஆவணத்திலேயே இப்படி கையெழுத்துப்பெற உத்தரவா? அதுவும் தனியார் முதலாளியிடமா? நாங்கள் பணியாற்றுவது அரசுப்போக்கு வரத்து கழகத்திலா, உணவக உரிமை யாளரிடமா?” என ஓட்டுநர்களும், ஊழியர்களும் கொந்தளித்தார்கள். கோவை ஒண்டிப்புதூர் கிளை முன்பு அனைத்து சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இப் போது கொஞ்சம் இறங்கி வந்த நிர்வாகம், ‘இன்வாய்சில் வேண்டாம், தனியான டோக்கன் சீட்டிலாவது வாங்கி வாருங்கள்’ என ஒண்டிப் புதூர் கிளை ஊழியர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. புதிய வரையறை: அரசுப்போக்குவரத்து கழகத் தின் கோவைக்கோட்டத்திலிருந்து மட்டும் 100 பேருந்துகள் மதுரை, தூத்துக்குடி இராமேஸ்வரம், காரைக்குடி, தேவகோட்டை, திருச்சி, கரூர், ராஜபாளையம், திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. இதுதவிர விரைவு போக்குவரத்து கழகம் தினசரி சென்னை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் என பல திசைகளில் 50 பேருந்துகளை கோவையிலிருந்து இயக்குகிறது. அதே எண்ணிக்கையிலான பேருந்துகள் மற்ற ஊர்க ளில் இருந்து கோவைக்கு வரும். சென்னை செல்லும் போக்குவரத்து பேருந்துகள் சேலம் அருகே உள்ள செங்கப்பள்ளி உணவகத்திலும் அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்துகள் தாராபுரம் அருகே உள்ள ஆர்யாஸ், வசந்தம், இந்தியன், பாலாஜிபவன் உள்ளிட்ட உணவகங்களிலும் நின்று செல்வது வழக்கம். இப்போது குறிப்பிட்ட பேருந்துகள் குறித்த கடைகளில் நிற்பது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்யாஸில் தினசரி 210 பேருந் துகள் நிற்கும், வண்டி ஒன்றுக்கு தலா ரூ. 40 வீதம் அவர் அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு மாதாந்திரம் பணம் செலுத்துவாராம். அதே போல் வசந்தம் ஓட்டலில் 180 பேருந்துகள் தினசரி நிற்கும் அதன் உரிமையாளர் தலா ரூ.55 வீதம் செலுத்த வேண்டுமாம். இந்தியன் ஓட்டலில் 180 பேருந்துகள் தினசரி நிற்கும் அதன் உரிமையாளர் தலா ரூ. 40, பாலாஜி பவனில் 105 பேருந்துகள் நிற்கும் அவர் தலா 43 ரூபாயும் செலுத்துவார்கள் என அதிகாரிகள் தரப்பில் சொல்கிறார்கள். வசந்தம் பவன் உரிமையாளர் ரூ 12 லட்சம் டெபாசிட் மட்டும் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டுக்கொள்ளை பரவாயில்லை, இந்த வரை முறைப்படுத்தலில் அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு வருமானம் தானே என்று பார்த்தால், அவை முழுவதும் பயணிகள் பாக்கெட்டையே பதம் பார்க்கிறது. ஏற்கனவே பஸ்கட்டண உயர்வால் சுமார் 80 சதவீதம் கூடுதலாகச் செலவிடும் பயணிகள் தலையில் உணவகங்களும் விலை ஏற்றி அதிகாரப்பூர்வமாய் இப்போது கொள்ளையிடுகிறார்கள். கட்டண உயர்வுக்கு முன் கோவை முதல் மதுரைக்கு கட்டணம் ரூ.70 செலவு என்றால் தற்போது மொத்த செலவே ரூ 150 வரை உயர்ந்துவிட்டது. இதே போல் இதர ஊர்களுக்குமான செலவுகளும் கட்டுக்கடங்காது உயர்ந்து விட்டது. ஆளுங்கட்சி கைகோர்ப்பு அரசு சார் நிறுவனங்கள் ஒப்பந்தப் பணிகளை பகிரங்க ஏல முறையிலேயே செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால் உணவகங்களை வரையறை செய்யும் இந்த நடைமுறை, அப்படிச் செய்யப்பட்டதாக இல்லை. ஏனென்றால் அதே கடைகள், அதே பேருந்துகள், விலைகள் மட்டும் அதிகம், கட்டுப்பாடுகள் புதிது. எனவே அரசுப்போக்கு வரத்துக்கழக உயர் அதிகாரிகள் ஆளும் கட்சியினர், அதிமுகவின் போக்குவரத்து சங்க நிர்வாகிகள், உணவக உரிமையாளர் இடையே நெருக்கமான காட்டும், பரஸ்பர ஒத்துழைப்பும் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. தாராபுரம் அருகே உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் ஈரோடு அரசுப் போக்குவரத் துக்கழகத்தில் பணியாற்றுகிற, அண்ணா தொழிற்சங்கத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒருவரும் கூட்டுப்பங்குதாரர் என்கிறார்கள். ஆர்யாசில் மட்டும் 210 பேருந்துகள் நிற்கும். ஆனால் வண்டிக்கு ரூ.40 என்ற நிர்ணயமே இந்தக் கூட்டை அம்பலப்படுத்துகிறது. ஆதாயமின்றி அரசு அதிகாரிகளும் எதையும் செய்வதில்லை என்பதை வரையறைக்கு முன்னும், பின்னும் ‘அதே கடைகள், அதே உரிமையா ளர்கள் என்பதே உணர்த்துகிறது. கெடுபிடியின் காரணம்! கோவை அரசுப்போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ப.காளியப்பனிடம் இதுகுறித்து கேட்டோம். அவர் கூறியதாவது. திமுக ஆட்சியின் போது திடீர் திடீரென சில உத்தரவுகள் வரும். இரண்டு செக்கர்கள் தாராபுரம் சாலையோர உணவகங்கள் முன்பு நின்று பேருந்துகளை அங்கு நிறுத்தினால் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அபராதம் போடுவார்கள். தாராபுரம் பஸ் நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும் என்றனர். அங்கும் இடப் பற்றாக்குறை. ஒருவாரம் 10 நாள் இந்த கெடுபிடி நீடிக்கும். பின்னர் சொல்லாமல் கொள்ளாமல் கட்டுப் பாடுகள் தளர்த்தப்படும். இடையில் யாருக்கு எங்கு எவ்வளவு என்றெல்லாம் தெரியாது. ஆனால் அதிரடி ரெய்டுகள் கடும் உத்தரவுகள் உணவக உரிமையாளரை பணிய வைக்கவே என்பது மட்டும் வெளிப்படையானது. இப்போதைய நடைமுறையில் ஏதோ பள்ளி மாணவன் மதிப்பெண் அறிக்கையில் கையெழுத்துப் பெறுவது போல் அரசுக்கழக ஆவணத்தில் போய் கையெழுத்திடுங்கள் என நிற்பதை எங்களால் சகித்துக் கொள்ள முடிய வில்லை. மற்றபடி போக்குவரத்துக் கழகத்திற்கு இலாபம்வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சிதான், ஏற்கனவே தமிழக முழுவதும் அரசு போக்குவரத்து கழகமே மோட்டல்களை நடத்தியது. இப்போதும் கூட தனியார் கொள்ளை லாபத்தை தவிர்க்க அரசாங்கமே சாலையோர உணவகங்களை நடத்தலாம் என்றார். உள்ளங்கை - நெல்லிக்கனி தொமுச ஒண்டிப்புதூர் கிளைச் செயலாளர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது அரசின் ஆவணங்களில் தனியாரிடம் முத்திரைக்காக கையேந்தி நிற்பதை நாங்கள் ஏற்கவில்லை. அனைவருக்கும் ஒன்று சேர்ந்து போராடினோம். இப்போது டோக்கன் தருவதை வாங்கி ஒப்படைக்கச்சொல்கிறார்கள். பேருந்துகள் நிற்கின்றனவா, இல்லையா என்பதை கழகத்திலிருந்தே ஓர் ஆய்வாளர் மூலம் சரிபார்ப்பதே நல்லது என்று கூறினார். விளக்கம் பெற அரசுப்போக்கு வரத்துக்கழக ஒண்டிப்புதூர் கிளை மேலாளரை தொடர்பு கொண்டோம். அவர் தலைமையகத்தை கைகாட்டினார். அங்கு தொடர்பு கொண்டோம். அவர்கள் வணிகப் பிரிவை கைகாட்டினார்கள். வணி கப்பிரிவும், விரைவுப்போக்குவ ரத்துகோவை கிளை மேலாளர் சம்பத்தும், சென்னை பல்லாவரத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில், வணிகப்பிரிவில் மட்டுமே கேட்க வேண்டும்! எங்களுக்கு ஏதும் தெரியாது என ஒதுங்கி கொள்வதி லேயே உறுதியாக இருந்தனர். மொத்தத்தில் சாமானிய மக்கள் பாக்கெட்டில் இருக்கும் சில்லரை காசுகளையும் கொள்ளையடிப்பதில் குறியாக செயல் குறிவைத்தே நடத்தப்படும் லஞ்ச ஊழல், ஆளும் கட்சிதலையீடுகள் இதில் கை கோர்த்துள்ளதும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகிறது. தனியார் உணவகங்களின் கொள்ளை லாப பசிக்கு பயணிகளை இரையாக்குவதை விட அரசோ, போக்குவரத்து கழகமோ உணவகங்களை நடத்த முன்வருவதே சாலச்சிறந்தது ஆகும்.
    நன்றி ;தீக்கதிர்

No comments:

Post a Comment